×  Welcome to Hixic! This Hixic page is tailored for our readers in TamilReturn to English



ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த தனுஷ்..!

நடிகர் தனுஷ், சினிமா உலகுக்கு அறிமுகமாகி 17 வருடமானதை, #17YearsofDhanushism என்ற ஹேஸ்டேக் மூலம் கொண்டாடிய அவரது ரசிகர்களுக்கு நடிகர் தனுஷ் நன்றி தெரிவித்துள்ளார்.

2002ம் ஆண்டு மே 10ம் தேதி வெளியான 'துள்ளுவதோ இளமை’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் தனுஷ். இதைத் தொடர்ந்து வெளியான 'காதல் கொண்டேன்’, 'திருடா திருடி’ ஆகிய படங்களின் மூலம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றார். வெற்றி மாறன் இயக்கத்தில் நடித்த 'ஆடுகளம்’ படத்தின் மூலம் தேசிய விருதைப் பெற்று, இந்திய சினிமா உலகில் தனக்கென தனி அடையாளத்தை ஏற்படுத்தினார். 


அடுத்தடுத்த வெற்றிகளின் மூலம் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் என்ற இடத்தை பிடித்துள்ளார். மேலும், '3’ படத்தில் இடம்பெற்ற 'வொய் திஸ் கொலவெறி...’ பாடலின் மூலம், அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் ஏற்பாடு செய்திருந்த விருந்தில் கலந்துகொள்ளும் அளவுக்கு பிரபலமானார்.

நடிகராக அறிமுகமான தனுஷ், பாடலாசிரியர், பாடகர், தயாரிப்பாளர் என மற்ற துறைகளிலும் கவனம் செலுத்தத் தொடங்கினார். இந்நிலையில் தனுஷ், சினிமா உலகுக்கு வந்து இன்றோடு (10ம் தேதி) 17 வருடம் ஆகியுள்ளது. இதை கொண்டாடும் வகையில் அவரது ரசிகர்கள், #17YearsofDhanushism என்ற ஹேஸ்டேக் மூலம் நேற்றில் இருந்து தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இதனால், சில மணி நேரங்களில் இந்த ஹேஸ்டேக் ட்ரண்டிங்காக தொடங்கியது. இதைத் தொடர்ந்து நடிகர் தனுஷ், அவரது ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ''தோல்விகள், வெற்றிகள் என அனைத்திலும் எனக்கு ஆதரவாக இருந்த ரசிகர்களுக்கு நன்றி. நான் தகுதியானவன் இல்லை; ஆனாலும், உங்கள் அன்பு, என்னை கடுமையாக உழைக்கச் சொல்கிறது” என்று கூறியுள்ளார்.

  • Express yourself