×  Welcome to Hixic! This Hixic page is tailored for our readers in TamilReturn to English



ஆட்சி மாற்றத்திற்கு காத்திருக்கும் இந்திய பாலியல் தொழிலாளர்கள்

இந்தியச் சமூகமும் அரசியல் தளமும் ஐம்பது லட்சம் பாலியல் தொழிலாளர்கள் இந்தியாவில் இருக்கிறார்கள் என்பதை எப்போதும் பொது வெளியில் பேச, விவாதிக்க மறுக்கும் பழமைவாத சமூகமாகவே இன்றளவும் இருக்கிறது.

    • Vel
      • Vel
      • Hixic Contributor

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் வாக்குகளைப் பதிவு செய்துவிட்டு அரசு மாற்றத்திற்காகக் காத்திருக்கின்றனர் இந்தியப் பாலியல் தொழிலாளிகள். வாக்கு சேகரிக்க வரும் வேட்பாளர்களிடம் பாலியல் தொழிலாளர்களின் உடல் மற்றும் சமூக நலன் சார்ந்து கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன. 


நடந்து முடிந்த தேர்தலில் சோனாக்காச்சியைச் சேர்ந்த பாலியல் தொழிலாளிகளின் 90 சதவிகிதத்திற்கும் அதிகமானோர் வாக்குப் பதிவு செய்திருக்கின்றனர். சத்தமில்லாமல் ஒரு புரட்சிக்கு அவர்கள் தயாராகிக் கொண்டிருக்கின்றனர்.

அகில இந்தியப் பாலியல் தொழிலாளர்களின் கூட்டமைப்பின் (All India Network of Sex Workers -AINSW) தலைவியான குஸூம் செய்தியாளர்களிடம், “எந்த அரசியல் கட்சி எங்களை இந்த சமூகத்தின் அங்கமாகப் பார்க்கப்போகிறது என்பதை அறிய நாங்கள் ஆவலாக இருக்கிறோம்” என்று கூறினார். இந்த அமைப்பில் தொடர்பில் இந்தியப் பாலியல் தொழிலாளிகள் சுமார் ஐம்பது லட்சம் உறுப்பினர்கள் இருக்கின்றனர். பாலியல் தொழிலைச் சார்ந்து இந்தியாவில், சுமார் இரண்டு கோடி பேர் இருப்பதாக THE GAURDIAN பத்திரிக்கை வெளியிட்ட ஒரு செய்தி கூறுகிறது.

இருப்பினும் பாலியல் தொழிலாளிகள் கடந்த கால அரசியலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதில்லை என்பது வெளிப்படை. பாலியல் தொழிலாளர்கள் தங்கள் அரசியல் பெரும்பான்மையைக் கண்டிப்பாக உணர வரப்போகும் காலங்களில் முயற்சிகள் எடுத்துக்கொண்டிருப்பதாக குஸூம் தெரிவிக்கிறார். 

இந்தியச் சமூகமும் அரசியல் தளமும் ஐம்பது லட்சம் பாலியல் தொழிலாளர்கள் இந்தியாவில் இருக்கிறார்கள் என்பதை எப்போதும் பொது வெளியில் பேச, விவாதிக்க மறுக்கும் பழமைவாத சமூகமாகவே இன்றளவும் இருக்கிறது. இந்நாட்டில் பிறந்தவர்கள் அவர்கள். அவர்களுக்கு இந்நாட்டில் குடியுரிமை இருக்கிறது என்பதை அரசியல் மற்றும் பொதுச் சமூகம் ஏற்க மறுக்கிறது.

ஆனால், அத்தகை நிலை இனிமேல் இருக்காது என்கிறார் குஸூம். எங்களுக்காக அரசியல் தளம் வாய் திறக்க வில்லையெனில் எங்களுக்கான உரிமைகளை உரத்துக் கத்துவோம். இல்லையேல் எங்களின் உரிமைக்கான அரசியலை நாங்களே உருவாக்கிக் கொள்வோம் என்கிறார் அவர். கல்கத்தாவில் நடந்து முடிந்த தேர்தலின்போது பாலியல் தொழிலாளர்கள் தங்களது கோரிக்கைகளை நேரடியாக வேட்பாளர்களிடம் முன்வைத்தனர். மேற்கு வங்காளத்தின் 150 வேட்பாளர்களில் சுமார் நூறு வேட்பாளர்களிடம், (பாஜக வேட்பாளர்களை தவிர்த்து) பாலியல் தொழிலாளர்கள் கையொப்பமிட்ட கோரிக்கை மனுக்கள் நேரில் ஒப்படைக்கப்பட்டது.

அதில், ஐம்பதிற்கும் மேம்பட்ட வேட்பாளர்களிடம் கையெழுத்திட்ட வாக்குறுதிகளையும் வாங்கி அசத்தியிருக்கின்றனர் அவர்கள். தேர்தல் முடிவு வெளியிடப்படும் நாள், நாங்கள் வெற்றியாளர்களின் வாசலில் நின்று எங்கள் கோரிக்கைக்கான பதிலைக் கேட்க ஆரம்பிப்போம் என்கிறார் ஸ்மரஜித் ஜனா. இவர் சோனாகாச்சியின் பாலியல் தொழிலாளர்களின் அமைப்பு ஒன்றின் சட்ட ஆலோசகர். சோனாகாச்சி கிழக்கு ஆசியாவிலேயே மிகப்பெரிய பாலியல் தொழில் நடக்கும் இடமாகும். ஸ்மரஜித் ஜனா சார்ந்திருக்கும் அமைப்பு AINSW-ன் ஒரு பகுதியாகச் செயல் படுகிறது.

இந்தியத் தலைநகர் புது தில்லியில், AINSW-ன் தில்லி கிளை அமைப்பு, தங்களுக்கான நலன் சார்ந்த கோரிக்கைகளைப் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு ஒன்றில் வைத்துத் தாக்கல் செய்தது. அதில் அடிப்படை சேவைகள், கல்வி உரிமை, நாற்பத்து ஐந்து வயதிற்கு மேம்பட்ட பாலியல் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் மற்றும் கொள்கை வகுத்தலில் பிரதிநிதித்துவம் போன்றவை பிரதான கோரிக்கையாக வைக்கப்பட்டது. 

மேலும் இந்தியத் தொழிலாளர் அமைச்சகத்தில் அதிகாரப் பூர்வ தொழிலாக பாலியல் தொழிலை அறிவிக்க வேண்டுமென்பதும் கோரிக்கையாக இடம் பெற்றிருந்தது. இவ்வாறு அறிவிக்கப்பட்டால் தற்கால அரசாங்க சலுகைகள் யாவும் இவர்களுக்கும் கிடைக்கப்பெறும். குறிப்பாக நியாயவிலைக்கடை அட்டை, அரசாங்க மருத்துவ காப்பீடு, விதவை மற்றும் வயதானவர்களுக்கான ஓய்வூதியங்கள் மற்றும் காயம்பட்டவர்களுக்கான இழப்பீட்டுத் தொகை போன்றவற்றுக்குத் தகுதியானவர்களாக பாலியல் தொழிலாளர்களும் ஆகிவிடுவர்.

இந்தியாவில் பாலியல் தொழில் சட்ட விரோதமானது இல்லையெனினும், இந்த கோரிக்கைகள் யாவும் கைகூடுவதில் சட்ட ரீதியாக சில சிக்கல்கள் இருக்கின்றன என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள். இவை எல்லாவற்றிற்கும் முன்னதாக, எந்த அரசியல் கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதிகளும் (தேர்தல் சமயங்களில் மட்டும்) பாலியல் தொழிலாளிகளிடம் செல்வதில்லை. அவர்கள் சமூக அரசியல் வட்டத்திற்கு அப்பாற்பட்ட ஜந்துக்களாகவே பார்க்கப்படுகின்றனர்.

இத்தகைய கோரிக்கைகள் நாளையே கைக்கூடவில்லையெனினும் இவ்வளவு ஆயிரம் பாலியல் தொழிலாளிகளுக்கு தங்களது உரிமைகள் சார்ந்த பிரக்ஞை ஏற்பட்டதே ஒரு பெரும் புரட்சியாகத்தான் பார்க்க வேண்டியிருக்கிறது. 

அவர்கள் தங்களுக்கு என்று ஒரு அமைப்பை உருவாக்கி, தொழிலாளர்கள் அனைவரையும் ஒன்று திரட்டியிருக்கின்றனர். தங்களுக்கான நலனை வகுக்க கற்றுக் கொண்டிருக்கின்றனர். நேற்று அவற்றை முன்வைத்திருக்கின்றனர். அது கிடைக்கவில்லையெனில் நாளை போராட்டம் நடத்துவர். நாளை மறுநாள் அவர்களுக்கான உரிமைககள் அவர்களுக்கு நிச்சயம் கிடைக்கும்.

  • Express yourself