×  Welcome to Hixic! This Hixic page is tailored for our readers in TamilReturn to English



கோட்சே மறுபிறவி எடுக்க இந்து மகாசபா யாகம்..!

கோட்சேவின் பிறந்தநாளை இந்து மகாசபையினர் கொண்டாடியுள்ள நிலையில், ’காந்தியைப் போல இந்தியாவை பிரிக்க நினைக்கும் நபர்களை கொல்வதற்காக கோட்சே மறுபிறப்பெடுக்க வேண்டும்’ என்று அவ்வமைப்பின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • Kirubamohan
      • Kirubamohan
      • ஹிக்ஸிக் சொற்சிற்பி

அரவக்குறிச்சியில் மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர் மோகன்ராஜை ஆதரித்து பிரச்சாரம் செய்த அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன், ”சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே” என்றார். இதற்கு பாஜக, ஆர்எஸ்எஸ், இந்து மகாசபா உள்ளிட்ட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன.


இதையடுத்து, கமல்ஹாசனும் பதிலளிக்கும் விதமாக பேசிய போபால் தொகுதியின் பாஜக வேட்பாளர் சாத்வி பிரக்யா தாகுர்,”கோட்சே ஒரு தேசபக்தராகவே இருந்தார். தேசபக்தராகவே இருக்கிறார். தேசபக்தராகவே இருப்பார்” என்றார். இந்த கருத்து கடும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், அதற்கு சாத்வி பிரக்யா தாகுர் மன்னிப்பு கோரினார்.

இந்நிலையில், தேசதந்தை காந்தியடிகளை சுட்டுக் கொன்ற நாதுராம் விநாயக கோட்சேவின் 109வது பிறந்தநாளை மத்திய பிரதேசம் மாநிலம் குவாலியரில் உள்ள இந்து மகாசபையினர் நேற்று (19ம் தேதி) கொண்டாடியுள்ளனர். 

இது குறித்து பேசிய இந்து மகாசபையின் துணைத் தலைவர் ஜைவீர் பரத்வாஜ்,” கோட்சே படத்திற்கு ஆரத்தி எடுத்து வழிபட்டோம். பாஜக தலைவர்கள் பலர் கோட்சேவை தேசபக்தர்களாக கருதுகின்றனர். ஆளும் கட்சியாக இருப்பதால் வெளிக்காட்டிக்கொள்ள மறுக்கின்றனர்” என்றார்.

அதேபோல், உத்தரபிரதேச மாநிலம் அலிகாரில் உள்ள இந்து மகாசபையினர் யாகம் வளர்த்து கோட்சேவின் பிறந்தநாளை கொண்டாடியுள்ளனர். இது குறித்து பேசிய இந்து மகாசபையின் செய்தித் தொடர்பாளர் அசோக் பாண்டே,” சாத்வி பிரக்யா தாகுர் கோட்சேவை தேசபக்தர் என்று சொன்னது முற்றிலும் சரி. 

அரசியல் அழுத்தம் காரணமாக மன்னிப்பு கேட்டுள்ளார். காந்தியைப் போல இந்தியாவை பிரிக்க நினைக்கும் நபர்களை கொல்வதற்காக கோட்சே மறுபிறப்பெடுக்க வேண்டும் என்று யாகம் செய்து வேண்டினோம். 

வருகின்ற நாட்களில் இந்தியா முழுவதும் கோட்சேவிற்கு கோயில்கள் கட்டப்படும். சிலை அமைக்கப்படும். காந்தியின் பிறந்தநாளை அனைவரும் கட்டாயத்தின் பேரில் கொண்டாடுகின்றனர். கோட்சேவின் பிறந்தநாளை விரும்பி கொண்டாடுகின்றனர். 

தேசத்தை பாதுகாக்கும் சித்தாந்தம் கோட்சேவினுடையதே, காந்தியுடையது அல்ல” என்றார். தேசத்தந்தை காந்தியடிகளை சுட்டுக் கொன்ற கோட்சேவின் பிறந்தநாளை இந்து மகாசபையினர் கொண்டாடியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • Express yourself