×  Welcome to Hixic! This Hixic page is tailored for our readers in TamilReturn to English



ஃபைபர் படகில் சென்று பாம்பன் தீவுகளை பார்க்க வனத்துறை ஏற்பாடு..!

மன்னார் வளைகுடா கடல் பகுதியில் உள்ள தீவுகள், பவளப்பாறைகள் மற்றும் கடல்வாழ் உயிரினங்களை சுற்றுலாப் பயணிகள் கண்டுகளிக்க வசதியாக, அடுத்தமாதம் முதல் ஃபைபர் படகு போக்குவரத்து தொடங்கப்படுகிறது.

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் முதல், தூத்துக்குடி வரை உள்ள மன்னார் வளைகுடா கடல் பகுதியில் 21 தீவுகள் உள்ளன. இவற்றைச் சுற்றி பவளப் பாறைகள், டால்பின், கடல் பசு, கடல் குதிரை, கடல் அட்டை என 2 ஆயிரத்துக்கும் அதிகமான அரிய வகை கடல்வாழ் உயிரினங்கள் வசிக்கின்றன. இதன்காரணமாக, இந்தப் பகுதியை பாதுகாக்கும் வகையில், ‘தேசிய கடல் பூங்கா’ என அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில், இதுவரை பாம்பன் பாலத்தில் இருந்து கடலில் அமைந்துள்ள தீவுகளை கண்டு ரசித்த சுற்றுலாப் பயணிகளின் இயற்கை ஆர்வத்தை பூர்த்தி செய்யும் விதமாக, அவர்களை தீவுகளுக்கே அழைத்துச் சென்று, பவளப் பாறைகள் மற்றும் கடல்வாழ் உயிரினங்களை கண்டுகளிக்க வன உயிரினச் சரகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக, மன்னார் வளைகுடா கடல் பகுதியில் உள்ள குருசடைத் தீவு, புள்ளிவாசல் தீவு, சிங்கிலித் தீவு, பூமரிச்சான் தீவு ஆகிய 4 தீவுகள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள் சூழல் சுற்றுலா மையமாக அறிவிக்கப்பட்டது. அத்துடன், இந்த தீவுகளைச் சுற்றியுள்ள பகுதிகள் மறுஎல்லை வரையறை செய்யப்பட்டு, புதிய மிதவைகள் அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

அத்துடன், சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் செல்வதற்காக புதுச்சேரியில் இருந்து 15 ரூபாய் லட்சம் ரூபாயில் வாங்கப்பட்ட பயணிகள் படகும், தலா 10 லட்சம் ரூபாயில் வாங்கப்பட்ட 2 ஃபைபர் படகுகளும் தயார் நிலையில் உள்ளன. பயணிகளை ஏற்றிச் செல்வதற்காக பாம்பன் குந்துகால் பகுதியில் 5 லட்சம் ரூபாய் செலவில் இறங்குதளம் (ஜெட்டி) அமைக்கப்பட்டுள்ளது. மேலும், குருசடைத் தீவு பகுதியில் ஏற்கெனவே உள்ள இறங்குதளம்  2 லட்சம் ரூபாய் செலவில் மராமத்து செய்யப்பட்டுள்ளது.

குந்துகால் தளத்தில் இருந்து 20 பயணிகள் படகில் அழைத்துச் செல்லப்பட்டு குருசடைத் தீவில் இறக்கிவிடப்படுவார்கள். அவர்கள், தீவின் அழகை கண்டுகளித்த பின்னர் அங்கிருந்து ஃபைபர் படகு மூலம் மற்ற 3 தீவுகளுக்கும் அழைத்துச் செல்லப்படுவார்கள். அப்போது, கடலின் அடியில் உள்ள உயிரினங்கள், தாவரங்கள், பவளப்பாறை போன்றவைகளை கண்டு ரசிக்கலாம். இதன்பின்னர், மீண்டும் அவர்கள் குருசடைத் தீவுக்கு கூட்டிவரப்பட்டு, அங்கிருந்து பயணிகள் படகு மூலம் குந்துகாலுக்கு திருப்பி அழைத்து வரப்படுவார்கள்.

இதுபோன்று, ஒரு நாளைக்கு 5 சுற்றுகள் அழைத்துச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. இந்த படகு சவாரி காலை 6 மணி முதல் பிற்பகல் 1 மணிவரை நடைபெறும். இதற்கான டிக்கெட்டுகள் ஆன்லைன் மூலம் மட்டுமே பதிவு செய்யப்படும். இந்த பணிகள் அனைத்தும் இம்மாத இறுதிக்குள் முடிவடைந்து, ஜூனில் சுற்றுலா படகு போக்குவரத்து தொடங்கப்படும்.

இதன்மூலம், இதுநாள் வரை பாம்பன் பாலத்தில் நின்று கடல் அழகையும், தீவுகளையும் கண்டு ரசித்த சுற்றுலாப் பயணிகள், இனி படகுகளில் சென்று நேரடியாக இயற்கை அழகை கண்டு களிக்கலாம்.

  • Express yourself