×  Welcome to Hixic! This Hixic page is tailored for our readers in TamilReturn to Englishசமூக விடுதலைப் போராளி ஃப்ரெட்ரிக் டக்லஸ்..!

ஒரு நாள் பொறுக்க மாட்டாமல் திருப்பி அடிக்க ஆரம்பித்தார். இருவருக்கும் இடையே நடந்த சண்டை இரண்டு மணி நேரங்களுக்கு நீண்டது. இறுதியில் ஃப்ரெட்ரிக் வெற்றி பெற்றார். அந்த நொடியிலிருந்து இனி யாரிடமும் அடிவாங்கக் கூடாது என்று உறுதிப் பூண்டார்.

போராட்டம் நடத்தாமலோ, கலகம் செய்யாமலோ விடுதலை வேண்டும் எனக் கோருபவன் மண்ணை உழாமல் பயிரை அறுவடை செய்ய நினைப்பவனாவான். அவனுக்கு என்றுமே ஏமாற்றம் மட்டுமே மிஞ்சும்.


பிறப்பும் வளர்ப்பும்

ஃப்ரெட்ரிக் டக்லஸ் கறுப்பின அடிமைப் பெண் ஒருவருக்கும் அவரது எஜமானனான வெள்ளை இனத்தவருக்கும் 1818ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14ம் நாள் பிறந்தார். பண்ணை அடிமையாக இருந்த அவரது தாய், ஃப்ரெட்ரிக்கின் ஏழாவது வயதில் காலமானார். தனது தந்தையின் வீட்டிலேயே அடிமையாக வேலை செய்தார் ஃப்ரெட்ரிக். அவரது தந்தை கொடூர மனம் படைத்தவர். அவரை பொருத்த வரை கறுப்பினத்தவர் மட்டும் அடிமை கிடையாது, அனைத்து பெண்களும் அடிமைகள்தான். அவர் அவரது மனைவியைச் சாட்டையால் விலாசுவதை பலமுறை நேரில் கண்டு துடித்திருக்கிறார் ஃப்ரெட்ரிக்.

இளம் வயதிலேயே அவரை கப்பல் கட்டும் தச்சர் ஒருவரிடம் அடிமையாக விற்றார் அவரது தந்தை. தச்சரின் மனைவி ஃப்ரெட்ரிக்கின் மேல் பிரியம் கொண்டு அவருக்கு எழுதப் படிக்க கற்றுக் கொடுக்கலானார். ஆனால், இந்த விஷயம் தச்சருக்குத் தெரிந்து பாடம் கற்பிப்பதைத் தடை செய்தார். அதன் பிறகு படிப்பின் மேல் ஆர்வம் கொண்டு, வெள்ளை இன மாணவர்களிடம், தனக்குக் கிடைத்த உணவைக் கொடுத்து, பதிலுக்குப் பாடம் கற்றுக்கொள்ள ஆரம்பித்தார் ஃப்ரெட்ரிக்.

அடிமைத்தனத்திலிருந்து விடுதலைக்கு அறிவே நம்மை அழைத்துச்செல்கிறது

அவரது வாசிப்புத் திறன் அதிகரிக்கவே, கவனம் அரசியல் புத்தகங்களின் பக்கம் சென்றது. எவ்வளவு அதிகமாக அவர் வாசித்தாரோ அவ்வளவு அதிகமாகத் தனது சமூகம் அனுபவிக்கும் அநீதிகள் அவரது கண்களுக்குத் தெரிய ஆரம்பித்தன. படிப்பறிவின் தேவையைப் புரிந்து கொண்ட ஃப்ரெட்ரிக், ஆலயத்தின் சேவையைப் பயன்படுத்தி அங்கு வரும் பிற அடிமைகளுக்குப் பாடம் கற்பிக்க ஆரம்பித்தார். 

அவரது பயிற்சியில் சுமார் நாற்பதுக்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர். வெகு விரைவிலேயே விவிலியத்தின் புதிய ஏற்பாட்டை வாசிக்கும் அளவிற்குப் பலரை அவர் தயார் செய்திருந்தார். பின்னர், அவர்களின் எஜமானர்கள் அதைக் கண்டறிந்து தடுத்துவிட்டனர்.

அடிமைகளின் அறிவு வளர்ச்சியை எஜமானர்கள் விரும்புவதில்லை. அதற்கான ஊற்றுக்கண் யாவற்றையும் அவர்கள் முடிந்த மட்டும் அடைத்து விடுவர். ஃப்ரெட்ரிக்கையும் அவர்கள் அங்கு இருக்க விடவில்லை. அவரை வேறு ஒரு பகுதியில் இருக்கும் தோட்ட பண்ணைக்கு விற்றனர். புதிய எஜமானன் ஃப்ரேட்ரிக்கின் தந்தையை அவருக்கு ஞாபகப்படுத்தினான். சவுக்கால் அடிமைகளை அடிப்பதில் அலாதியான இன்பம் காணும் குரூர மனம் அவனுக்கு இருந்தது. அவனது சவுக்கடிகளை ஆறு மாதம் தாங்கிக் கொண்டார் ஃப்ரெட்ரிக்.

ஆனால், ஒரு நாள் பொறுக்க மாட்டாமல் திருப்பி அடிக்க ஆரம்பித்தார். இருவருக்கும் இடையே நடந்த சண்டை இரண்டு மணி நேரங்களுக்கு நீண்டது. இறுதியில் ஃப்ரெட்ரிக் வெற்றி பெற்றார். அந்த நொடியிலிருந்து இனி யாரிடமும் அடிவாங்கக் கூடாது என்று உறுதிப் பூண்டார். அவரது இருபதாவது வயதிற்குள் அவர் இருமுறை முயற்சி செய்து இறுதியாக அடிமை வாழ்க்கையிலிருந்து தப்பித்து சுதந்திர மனிதரானார்.

பொது வாழ்க்கை

ஃப்ரெட்ரிக் டக்ளஸ் அடிமை முறைக்கு எதிராக நான்கு புத்தகங்களை எழுதினார். Narrative of the Life of Frederick Douglass, an American Slave என்கிற அவரது சுய சரிதை புத்தகம் மிகவும் புகழ் வாய்ந்ததாகும். The north star என்னும் பெயரில் அடிமை முறைக்கு எதிரான நாளிதழ் ஒன்றையும் ஆரம்பித்து நடத்தினார். 

லின்கன் மற்றும் ஜான்ஸன் போன்ற அமெரிக்க அதிபர்களுக்கு ஆலோசகராக இருந்து கறுப்பின அடிமை முறைக்கு எதிராகப் பல முன்னெடுப்புகளைச் செய்தார். கருப்பினதவர்களுக்கான ஓட்டுரிமை, கறுப்பின படையாட்களுக்கான நலன் சார்ந்த விஷயங்களில் அதிக கவனம் செலுத்தினார். பாதாள ரயில் சாலைப்பணியில் ஈடுபடுத்தப் பட்டிருக்கும் அடிமைகளை விடுவிக்கச் செய்தார்.

இரு இனங்களுக்கு இடையிலான சகிப்புத்தன்மை மற்றும் அனைவருக்குமான சமத்துவத்தை மையமாகக் கொண்டு அவர் ஆற்றிய பேருரைகள் பெரும் புகழ்பெற்றன. பெண்களுக்கான உரிமைகள் மாநாட்டில் கலந்துகொண்ட முதல் அப்ரிக்க அமெரிக்கர் ஃப்ரெட்ரிக். அவரது வாழ்க்கையும் படைப்புகளும் அமெரிக்கக் கறுப்பினத்தவர்கள் மட்டுமல்லாது, உலகின் பிற பகுதிகளில் விடுதலைப்போராட்டம் நடத்திக்கொண்டிருக்கும் அனைவருக்கும் இன்று வரை பெரும் உந்துதலாக இருந்து வருகிறது. அவரது குரல் அநீதிக்கு எதிரான குரல்.  

அமெரிக்காவைப் பற்றிய அவரது அவதானிப்பான “அமெரிக்கா  கடந்த காலத்திலும் பொய்மையையே வரலாறாகக் கொண்டிருக்கிறது, நிகழ்காலத்திலும் அவ்வாறே. வரும் காலத்திலும் பொய்மையையே பற்றிப்பிடித்து நகரும்” என்கிற வாக்கியம் நூறு ஆண்டுகள் கழித்தும் இன்றுவரை உன்மையாகவே ஒலித்துக்கொண்டிருக்கின்றன.

  • Express yourself